ஒருமுறை திருமால் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்க, ஆதிசேஷன் தனது வாலினால் பூமியை வகிண்டு (பிளந்து) தண்ணீர் உண்டாக்கிய தலமாதலால் 'திருவகிண்டபுரம்' என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் 'திருவயிந்திபுரம்' என்று மாறியது. கருடன் அந்தத் தண்ணீரைக் கொண்டு வந்து திருமாலுக்குக் கொடுத்தத் தீர்த்தமே பின்னர் 'கருட நதி'யாக ஓடி, தற்போது 'கெடில நதி' என்று மருவியது. ஆதிசேஷன் உருவாக்கிய சேஷ தீர்த்தம் நிவேதனத்திற்கும், கருட தீர்த்தம் திருமஞ்சனத்திற்கும் இன்றும் உபயோகிக்கப்பட்டு வருகிறது.
மூலவர் தெய்வநாயகன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் தேவநாதப் பெருமாள். தாயார் ஹேமாம்புஜவல்லி என்றும், வைகுந்த நாயகி என்றும் வணங்கப்படுகின்றார். கருடனுக்கும், சந்திரனுக்கும் பெருமாள் பிரத்யக்ஷம்.
கோயிலுக்கு அருகில் ஔஷதகிரி என்ற குன்றின் மேல் ஹயக்ரீவர் சந்நிதியிருக்கிறது. புரட்டாசி மாதத்தில் நடைபெறும் மலை உத்ஸவமும், தீர்த்தவாரியும் விஷேனமானவை.
வடகலை ஆசார்யரான ஸ்வாமி தேசிகன் இங்கு தவம் செய்து ஹயக்ரீவர் அருளையும், கருடன் அருளையும் பெற்றார். கோயிலுக்கும் தேசிகன் சந்நிதி உள்ளது. மணவாள மாமுனிகளும் இத்திவ்ய தேசத்திற்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார். அவருக்கு மாடவீதியில் சந்நிதி உள்ளது.
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
|